கமலஹாசனும் எஸ்பி பாலசுப்ரமணியனும் தொலைக்காட்சியில் பாடிக்கொண்டிருக்கிறார்கள். முகம் தெரியாதவர்களின் கைதட்டல் ஒலித்து ஓய்கிறது.ஏக் துஜே கேலியேவில் ஒரு சோகப்பாடல்.கண்கலங்குகிறது.
ஒருமுறை வெயில்காலத்தில் வடபழனி பேருந்துநிலையத்தில் கேட்ட பாடலைப்பாடியவர் கண்தெரியாத ஒரு பெண்.'கண்கள் இரண்டும்' என்று உன்னைக்கண்டு பேசுமோ'என்று கீச்சுக்குரலில் துவங்கும் பழைய பாடல்.சில்லறை கொடுக்கலாம் என்று எடுத்துக் கையில் வைத்திருந்தேன்.பேருந்து கிளம்பும் நேரம்வர நடத்துனர் விரட்ட பாதிப் பாடலுடன் அவள் இறங்கி வெயிலில் நடந்துபோனாள்.கண்கலங்கியது.
ஒரு பிறந்தநாள் பார்ட்டியில் நல்ல குடிபோதையில் நண்பர் பாடிய 'உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது.'.என்று பாடத்துவங்கி பாதியில் அழுதார்.ஏனோ கண் கலங்கியது.
ஊரிலிருக்கும் அப்பாவிடம் எனது பையன் பாட்டுப்பாடு என்று கேட்க அவர் நான் சின்னவனாகத் தூளியில் இருக்கையில் பாடியதாக சிங்காரப்புன்னகை கண்ணாரக்கண்டாலே..என்று குரலுடைந்து பாடினார். கண்கள் கலங்கி வழிந்தன. பயணத்தில் சிலநேரம். தூக்கம் வராத இரவுகளில் எப்போதாவது. அழவைக்கும் பாடல்கள் உங்களிடமும் இருக்கிறதா நண்ப.
Friday, November 16, 2007
Wednesday, November 14, 2007
இயக்குனர் கீஸ்லோவ்ஸ்கி
திரைப்படத்திற்கும் தொலைகாட்சிக்கும் என்ன வித்தியாசம் என்ற கேள்விக்கு போலந்து இயக்குனர் கீஸ்லோவ்ஸ்கி சொன்ன பதில் எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தைக்கொடுத்தது.பதில் இதுதான். திரைப்படம் தருகிற அனுபவம் பொதுவானது.தொலைக்காட்சி தனிமை சார்ந்தது. திரையரங்கில் ஒரு தோழியுடன் கைகோர்த்து தோளில் சாய்ந்துகொண்டு படம்பார்க்க முடியும்.அப்படி ஒரு தொலைகாட்சியைப் பார்க்கமுடியுமா?முடியாது.ஏன்?இதற்கான பதில்தான் கேள்வியின் விடை
Monday, November 12, 2007
gandhiyaip paarthen
கடந்த வாரத்தில் காந்தி படம் பார்த்தேன்.சிறுவயதில் பள்ளியில் அழைத்துபோகையில் காந்தியையையும் நேருவையும் அதிசயத்துனந்த உருவ ஒற்றுமையை மட்டுமே பார்த்திருந்தேன்.இப்போது பார்க்க அதன் தொழில் நுட்பமும் அர்ப்பணிப்பு சார்ந்த உழைப்பும் பென் கின்க்ஸ்லியின் நடிப்பும் பிரமிக்கவைக்கிறது.நேற்று எங்கள் படத்திற்கான ஒரு தேர்வுக்காக ஒரு பள்ளி மைதானத்திற்குப்போனோம்.சும்மா படப்பிடிப்பிற்கான இடம் பார்ல்க வந்திருப்பதாகப் பொய் சொல்லி உள்ளே போனோம்.அங்கிருந்த வயதான காவலாளி என்களை முதலில் அனுமதித்துப்பின்னர் கேமராவைப்பார்த்ததும் வெளியேறச்சொன்னார்.அவரிடம் இது சாதாரண கேமரா என்று எவ்வளவோ சொல்லியும் அவர் அனுமதிக்கவில்லைபோய் அனுமதி பெற்றுக்கொண்டு வாருங்கள்.இல்லையெனில் அனுமதிக்கமாட்டேன்,என்னைத்தயவு செய்து தவறாக நினைக்காதீர்கள்.இது என்கடமை யாரையும் அனுமதிக்கக் கூடாது என்று திரும்பத்திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தார்.எங்களுக்கு எரிச்சலாக இருந்தது.ஒருநிலையில் நான் சற்று அதட்டலாக உங்கள் கரஸ்பாண்டண்ட் பெயர் என்ன என்று கேட்டேன்.அவர் சொன்னார்.அவரை எனக்குத்தெரியும் நான்பேசவா என்று கேட்டேன்.அப்படி ஒருவரை எனக்குத்தெரியாது என்றபோதும் நான் அப்படிச் சொன்னேன்.அவரிடம் கரஸ்பாண்டண்டின் எண் என்று கேட்டேன்.அவர் தெரியாது என்று சொன்னார்.'அப்ப என்ன செய்யறது'சொல்லுங்க என்று நான் அவரிடம் கோபமாகசொன்னேன்.அதெல்லாம் தெரியாது சார்.இங்க எடுக்கக்கூடாது.தப்பா நினைக்காதீங்க என்று திரும்பவும் சொன்னார்.இதற்கிடையில் உடன்வந்த நண்பர் அவரை ஒரு நிமிடம் தனியா வாங்க என்று அழைத்துப்போய் பணம் ஏதாவது வாங்கிகங்க என்று சொன்னதும் அவர் அதை மறுத்து எனக்கு னான் வாங்குற சம்பளமே போதும் சார்.தயவு செய்து தப்பா நினைக்காதீங்க என்று சொல்லிக்கொண்டிருந்தார்.இதற்கிடையில்அவருக்குத்தெரியாமல் நான் படம்எடுக்க ஆரம்பித்திருந்தேன்.அதைக்கவனித்த அவர் திரும்பவும் அருகில் வந்து எடுக்ககூடாது சார்.தயவு செய்து தப்பா நினைக்காதீங்க..அனுமதி வாங்கிட்டு வாங்க ''ஹலோ..இது ஷூட்டிங் இல்ல.சும்மா டெஸ்ட்.''எதுன்னாலும் இருக்கட்டும் சார்.தயவுசெய்து எட்டுக்காதீங்க'ஒருநிலையில் கோபம்வந்த நாங்கள் எல்லோரும் அங்இருந்த ஒருவரை சும்மா அனுமதி வாங்க அனுப்புவதுமாதிரி அனுப்பினோம்.அவர் வரட்டும் வந்தபிறகு தயவுசெய்து எடுங்க.யாராவ்து பாத்தா என்வேலை போயிடும்'அதெல்லாம் போகாதுங்க.ஏற்கனவே இன்க பலமுறை வந்து எடுத்திருக்கிறோம்(ஏற்கனவே ஒருமுறை அங்கிருக்கும் காவலாளிக்கு அறுபது ரூபாய் குவார்ட்டருக்காக அவர் கேட்டு கொடுத்துவிட்டு எடுத்திருக்கிறோம்)எனவே இவரையும் சமாளிக்கலாம் என்று நினைத்தோம். ஆனால் அவர் மசியவில்லை. ஒருநிலையில் அவர் சமாதானமாகாமல் வேகமாக அங்கிருந்து நடந்து சென்றார்.நாங்கள் அவரை மனசுக்குள் திட்டிவிட்டு அவரது அறியாமையைக்கேலி செய்துவிட்டு என்கள் வேலையைத்தொடர்ந்தோம்.கொஞ்சநேரத்தில் அவர் ஒரு ஆசிரியையுடன் திரும்பி வந்தார்.ஆசிரியையும் அவர் சொன்னதையே திரும்பதிரும்பச்சொன்னாள்.திருப்பி என்ன சொன்னாலும் அவர் தயவுசெய்து நீங்க அனுமதி வாங்கிட்டு எடுங்க சார் என்பதையே சொல்லிக்கொண்டிருந்தார். வேறு வழியில்லாமல் எரிச்சலுடன் அங்கிருந்து வெளியேறினோம்.எனக்கு நடந்த சூழல் ஒருநிலையில் சிரிப்பாகவும் இருந்தது.சற்றே கேலியாக அந்த காவலாளியை பார்க்கும் போது அவர் கையில் நீளமான தென்னங்கீற்றின் நடுவிலிருக்கும் நீளமான கம்பைக்கையில் வைத்திருந்தார்.எனக்கு ஆச்சரியமாக காந்தியின் ஞாபகம் வந்தது.உடனே நான் சொன்ன பொய்களும்,அவர் தோற்றத்தைப் பார்த்ததும் என்இயல்புக்கு மாறாக னான் அவரை அதட்டியதும் நினைவுக்கு வந்தது. மெல்லிய குற்ற உணர்வு எனக்குள் வந்தது.இரவெல்லாம் காந்தி படமும் அவர் விவசாயிகளுக்காக கைது செய்யப்படும்போது நீதிபதி ஜாமீன் தொகை கட்டச்சொல்லும்போது கட்டமுடியாது.என்பதைத் தயவுடன் தெரிவிக்கிறேன் என்பார்.நீதிபதி வேறு வழியில்லாமல் அவரை ஜாமீன் கட்டாமல் விடுதலை செய்வார்.அந்தக்காட்சி ஞாபகம் வந்தது.அந்த அதட்டல் எனக்குள் ஏன் ஏற்பட்டது? நண்பர் எந்தக்குற்ற உணர் வும் இல்லாமல் அவருக்கு லஞ்சமாகப் பணம் தருவதாகச்சொன்னது எப்படி?கேள்விகள் இன்னும் சுழன்றுகொண்டே இருக்கின்றன.
May 12, 2007 8:45 PM
May 12, 2007 8:45 PM
Subscribe to:
Comments (Atom)
